புதன், 9 ஜனவரி, 2013

நல்லார் ஒருவர்.

நல்லார் ஒருவர்.

அரசுப்பள்ளிகளைப் பற்றி எப்போதுமே நமக்கு இளக்காரமான மனநிலையே இருந்து வருகிறது, ஆனால் நான் அரசுப்பள்ளியில் பயின்றவன் என்ற முறையில் அதன் தரம் மற்றும் குறைபாடுகளை நன்றாக அறிவேன், பெரும்பான்மை தனியார்பள்ளிகள் கல்வியை முழுமையானதொரு வணிகமாக மாற்றியுள்ள சூழலில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று.
பெரும்பான்மையான எனது பயணங்களில் அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று அதன் தற்போதைய நிலையைக் கண்டறிந்து வருகிறேன், கற்றுத்தரும் முறை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதே நான் அறிந்த உண்மை, கூடுதலாக போதுமான ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்பதும் முக்கியமான. பிரச்சனையாக உள்ளது, ஆனால் தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பாகப் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை நானே கண்டிருக்கிறேன்,
அவர்களை யாரும் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தவோ. அவர்களின் முயற்சிக்குத் துணைநிற்கவோ முயலவில்லை, தங்களால் முடிந்த அளவு அந்த ஆசிரியர்கள் மாணவர்களோடும் அதிகாரத்தோடும் போராடுகிறார்கள், பலநேரம் தோற்றுப்போகிறார்கள், பள்ளியையும் ஒரு அரசு அலுவலகம் போல நடத்தும் கல்வித்துறையின் நிர்வாக முறை அவர்களின் புதுமையான சிந்தனைகளை அனுமதிக்க மறுக்கிறது, இதன் இன்னொரு புறம் சம்பளத்திற்காக மட்டுமே அரசு வேலை என ஆசிரியர் பணிக்கு வந்திருக்கிறேன், ஆகவே நான் மேம்போக்காகவே தான் நடந்து கொள்வேன் என்று பிடிவாதம் பேசும் ஆசிரியர்களையும் நான் அறிவேன்,
அரசுப்பள்ளிகளின் தரம் ஊருக்கு ஊர் வேறுபட்டிருக்கிறது, பெரிய நகரில் உள்ள அரசுப்பள்ளிகள் ஒருதரத்திலும், சிறுநகரம் சார்ந்த பள்ளிகள் அதற்குக் கீழான தரத்திலும், கிராமப்புற அரசு பள்ளிகள் அதற்கும் குறைவான தரத்திலும். மலைவாழ்மக்களுக்கான பள்ளிகள் முற்றிலும் கவனிப்பார் இன்றியும் இருக்கின்றன என்பதே நடைமுறை உண்மை,
அரசுப்பள்ளிகள் ஒரே தரத்தில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டினை கல்வி அதிகாரிகளே ஒத்துக் கொள்கிறார்கள், ஆனால் அதைக் களைந்து ஒரே தரம் கொண்டுவர அக்கறை காட்டுவதேயில்லை, அதற்கான விழிப்புணர்வோ. தனிக்கவனமோ மேற்கொள்ளப்படவில்லை, சமச்சீர் கல்வி பற்றிய உரத்தவிவாதங்கள் உருவானது போல அடிப்படை கல்வியின் சீரமைப்பு பற்றி உரத்தவிவாதமும் புதியசெயல்திட்டங்களும் நடைமுறைப்படுத்தபட வேண்டும்
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு ராமம்பாளையத்தில் உள்ள அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி முன்மாதிரியான பதிலைத்தருகிறது
அந்தபள்ளியைப்பற்றி கேள்விப்பட்டு அதைப் பார்ப்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன்,
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில்  38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இராமம்பாளையம். ஆயிரம் பேர் வசிக்கின்றன மிகச்சிறிய கிராமம், அங்குள்ள ஆரம்ப பள்ளி 1930களில் துவங்கப்பட்டிருக்கிறது, சமீபமான வருசங்களில் அந்தப் பள்ளியைச் சுற்றிலும் உள்ள ஊர்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் துவங்கபட்டதால் பெரும்பான்மை சிறுவர்கள் அதில் சேர்க்கப்பட்டுவிட்டார்கள், ஆகவே அரசுப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை  குறைந்து போயிருக்கிறது,
கணிதம் படித்துவிட்டு புதிய ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த பிராங்களின் கல்வி சார்ந்த புதிய சிந்தனைகளைப் பயன்படுத்தி பள்ளியின் தரத்தை உயர்த்த முயன்றிருக்கிறார், இவர் முன்னதாக மலைவாழ்மக்களுக்கான பள்ளியில் வேலை செய்தவர் என்பதால் இயல்பாகவே பொறுமையும் விடாபிடியான முயற்சியும் கற்றுதருவதில் நூறு சதவீத ஈடுபாடும் கொண்டிருந்தார், இவரது முயற்சியால் இன்று அந்தப்பள்ளி தமிழகத்திலே ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாறியுள்ளது
ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான அப்பள்ளியில் தற்போது ஐம்பதுக்கும் குறைவான குழந்தைகள் தான் படிக்கிறார்கள். ஆனால் எந்த தனியார் பள்ளியை விடவும் மேம்பட்டதாக வகுப்பறையையும் கற்றுதருவதையும் பிராங்களின் உருவாக்கியிருக்கிறார்,
இதற்காக  பிராங்களின் உள்ளுர் நிர்வாகத்திடம் பேசி பொருளாதார உதவிகள் பெற்று கூடுதலாக தனது சொந்தப் பணத்தையும் செலவழித்திருக்கிறார், கற்றுதரும் முறையிலும் வகுப்பறையின் சூழலிலும் இதுபோன்ற பள்ளி எதையும் தமிழகத்தில் நான் கண்டதில்லை.
பொதுவாக கரும்பலகை என்றாலே மாணவர்களுக்கு அலர்ஜி, இதற்கு மாற்றே கிடையாதா என்று பலமுறை யோசித்திருக்கிறேன், இந்தப்பள்ளியில் கரும்பலகையே கிடையாது, மாறாக பச்சை நிறப் பலகை உள்ளது, அதுவும் ஆசிரியர்களுக்கு ஒன்று, மாணவர்களுக்கு ஒன்று என இரண்டு,
மாணவர்கள் தாங்கள் விரும்புவதைப் பச்சைப் பலகையில் எழுதிப்பார்த்துக் கொள்ளும்படியாக தரைக்கு மிக நெருக்கமாக அமைக்கபட்டிருக்கிறது, ஆகவே எந்தக் கூச்சமும் இன்றி மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதை பச்சைப் பலகையில் எழுதிப் பார்க்கிறார்கள்
அது போலவே பெரும்பான்மை பள்ளிகளில் காணப்படுவது போன்று இரும்பு மற்றும் மரத்தில் உருவாக்கபட்ட நீளநீளமான பெஞ்சுகளுக்குப் பதிலாக வட்டவடிவமான மேஜையும் இருக்கையும் அமைத்திருக்கிறார்கள், அதில் பாடப்புத்தகங்களை வைத்துக் கொள்ள சிறிய காப்பறை காணப்படுகிறது, ஆகவே புத்தகங்களைச் சுமந்து செல்லும் வேதனை சிறுவர்களுக்குக் கிடையாது, தேவையான புத்தகம், நோட்டு மட்டும் வீட்டிற்கு எடுத்துப்போய்வந்தால் போதும்.
பல பள்ளிகளின் வகுப்பறைச் சுவர்கள் பளுப்பாகி, காரை உதிர்ந்து போய் நம்மை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது, ஆனால் இந்தபள்ளியில் சுவர்கள் முழுவதும் இயற்கைக் காட்சிகளான ஒவியத்தால் நிரம்பியிருக்கிறது, ஏதோ ஒரு ஆர்ட் கேலரியின் உள்ளே போவது போல அத்தனை ரம்மியமாக இருக்கிறது, அழகான ஒவிய அமைப்பு கொண்ட அந்த வகுப்பறை இறுக்கமான காற்றோட்டமில்லாத வகுப்பறை என்ற கொடுங்கனவிற்கு மாற்று வெளியாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன்
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வெந்நீர், குளிர்நீர் என்று இரண்டு குடிநீர் குழாய்கள், படிப்பதற்காக சிறிய நூலகம்.  கணிப்பொறி வசதி, விஞ்ஞானம் மற்றும் கணிதம் கற்பிக்கத் தேவையான உபகரணங்கள், இத்துடன் பள்ளியின் பதிவேடுகளை மாணவர்களை தயாரிக்கிறார்கள்,
,கூடுதலாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, நுண்கலைப்பயிற்சிகள் , நாளிதழ்களை வாசிக்கப் பழகுவது, தினமும் ஒரு நல்ல கருத்தை நோட்டில் எழுதுவது, படித்த புத்தகங்களில் இருந்து பிடித்தமான பகுதிகளை எழுதுவது. கற்பனையாக பாடல்களை உருவாக்குவது, சொற்வளம் உருவாக்கும் பயிற்சி, கற்றல் குறைபாடு கொண்ட சிறுவர்களைத் தனித்து அடையாளம் கொண்டு சிறப்புக் கவனம் தருவது, இவை யாவையும் விட பள்ளியில் தண்டனையே கிடையாது, வகுப்பை மாணவர்கள் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்
அந்த மாணவர்களுக்காக ஒரு கதைசொல்லும் நிகழ்வை நடத்தினேன், அவர்கள் ஒரு கதையைச் சொல்ல பதிலுக்கு நான் கதை சொல்ல என ஒரு மணி நேரம் கதை, பாடல்கள், பொதுஅறிவுத்திறன் என்று நீண்டு கொண்டே போனது, பெருநகரப் பள்ளியின் தரத்தை விட இந்த மாணவர்களின்  வெளிப்பாட்டுத் திறன் பலமடங்கு சிறப்பாக இருப்பதை உணர முடிந்தது,
தமிழில் மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் இந்த மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், செயல்முறை கல்வி திட்டம் வழியாக பாடம் கற்று தரப்படுகிறது, ஆகவே பள்ளியைச் சுற்றியுள்ள செடிகொடிகள் பறவைகளை அடையாளம் கண்டு மாணவர்களே அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள், மாணவர்களின் கற்றல் திறனை பெற்றோர்கள் அறிந்த கொள்ள தனியே ஒரு கையேடு உருவாக்கியிருக்கிறார்கள்,
கற்றலை எளிதாக்க ஆடியோ வீடியோ உபகரணங்களையும் வகுப்பறையில் பயன்படுத்துகிறார்கள், அதற்கான டிவிடி நூலகமும் தனியே உள்ளது, ஒலிப்பெருக்கியுடன் கூடிய உட்கூரை அமைக்கப்பட்டிருக்கிறது, அது போலவே பள்ளியில் திடீரென ஏதாவது இயற்கை இடர்பாடு உருவானால் வெளியேற ஒரு அவசரகால வழியும் அமைக்கப்பட்டிருக்கிறது
அழகான சீருடை, காலணிகள் மற்றும்  அடையாள அட்டைகள். மாணவர்களின் கற்பனை திறனை ஊக்கப்படுத்த தனிவகுப்புகள் என்று அத்தனையும் இந்த பள்ளியில் சிறப்பாக உள்ளது,
இவை அத்தனையும் இலவசமாகக் கிடைக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்,
ராமம்பாளையம் பள்ளியில் உள்ள அத்தனை வசதிகளையும் உருவாக்க அந்த பள்ளி செலவிட்டுள்ள தொகை இரண்டரை லட்சம் மட்டுமே,
பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியையும், பிராங்களின் இருவருமே பணிக்கு இருக்கிறார்கள், ஒருவேளை பிராங்களின் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டால் இந்தப் பணி என்னவாகும் என்ற கவலை தலைமை ஆசிரியரிடம் நிறையவே காணப்படுகிறது.
மாவட்ட ஆட்சிதலைவரில் இருந்து கல்வித்துறை அதிகாரிகள், உள்ளுர் நாளிதழ்கள் வரை பலரும் இப் பள்ளியைப் பாராட்டியிருக்கிறார்கள்,  ஆனால் இது போல இன்னொரு பள்ளியை உருவாக்க முயற்சி செய்யவேயில்லை.
புதிய தலைமுறை இதழில் இப்பள்ளி பற்றி வெளியான கட்டுரையை வாசித்துவிட்டு வெளிநாட்டில் பணியாற்றும் பலரும் தங்களால் ஆன பொருளாதார உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு பிராங்களின் சொன்ன பதில் ,உங்களால் முடியுமானால் உங்கள் சொந்த ஊரில் இது போன்று ஒரு பள்ளியை உருவாக்குங்கள், அல்லது உருமாற்றுங்கள், அது தான் நான் விரும்புவது என்பதே
நான் பிராங்களினுடன் இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன், வாழ்க்கைக்கு உதவியாக அடிப்படைக் கல்வியை உருமாற்ற வேண்டும், அதற்குப் புதிய கற்றுதரும் முறைகளும், உபகரணங்களும்  அவசியமானவை, எங்கள் பள்ளியின் தேவை கல்வி சார்ந்த மென்பொருட்கள், புத்தகங்கள் மற்றும் நேஷனல்ஜியாகிரபி வெளியீடுகளாக உள்ள இயற்கை சார்ந்த வீடியோ பதிவுகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் போன்றவையே, இத்துடன் Educomp’s smartclass போன்ற மின்திரை வசதியுடன் கூடிய காட்சிவழிக்கல்வி அமைக்க உதவினால் மிகவும் உபயோகமாக இருக்கும்,
இந்த உதவிகளை விடவும் இப்பள்ளி போல தமிழகம் முழுவதும் சிறப்பு வகுப்பறைகளை உருவாக்கி கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், அது நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய அவசியமான பணி, அதைச் செய்யத் தவறினால் கல்வியைச் சீரழிப்பதோடு வருங்காலத் தலைமுறையின் அறிவுத்திறனை நாம் ஒடுக்கிவிடுகிறோம் என்பதே உண்மை என்கிறார் பிராங்களின்.
தமிழக அரசின் பத்திரபதிவுத்துறை. நிர்வாகத் துறை என்று பல்வேறு துறைகள் முற்றிலும் கணிணி மயமாக்கபட்டிருக்கிறது, ஆனால் முற்றிலும் கணிணி மயமாக்கப்பட வேண்டிய கல்வித் துறையில் அந்த முயற்சிகள் நடைபெறவேயில்லை.
தமிழகப் பள்ளிகளை ஒரே நெட்வொர்கில் கொண்டுவருவதன் மூலம் கல்வி நிலையங்களுக்கு இடையில் கற்றலில் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம், இன்றுள்ள இணைய வசதிகளைப் பயன்படுத்தி தரமான வகுப்புகளை யாவரும் ஒரே நேரத்தில் காணச் செய்ய இயலும், கூடுதலாக பள்ளிகளுக்கு இடையில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தர உயர்விற்கு அதிக சாத்தியங்கள் இருக்கின்றன,
குறைந்த பட்சம் அனைத்து அரசுப்பள்ளிகளும் ஒரே நெட்வொர்கில் இணைக்கப்பட்டால் அதன் செயல்பாட்டினை நுட்பமாக அவதானிக்கவும் மேம்படுத்தவும் எளிமையாக இருக்கும்
அரசுபள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நேரத்திற்கு வருகிறார்களா என்று கவனிக்க பள்ளி கல்வியதிகாரிக்கு  எஸ்எம்எஸ் அனுப்பும் முறையை அரசு செயல்படுத்திவருகிறது, அதன் காரணமாக ஒரளவு ஆசிரியர்களின் பணிச்செயல்பாடு அவதானிக்கப்படுகிறது, இது போன்ற முயற்சிகள் அரசு தரப்பில் செயல்பட்டபோதும் அதன் தரம் பற்றிய மக்களின் சிந்தனை இன்றும் பின்தங்கியே உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.
அரசுபள்ளிகளின் மேம்பாடு என்பது அரசின் செயல்பாட்டால் மட்டுமே மாற்றப்பட வேண்டிய ஒன்றில்லை, உள்ளுர் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் விருப்பம் மற்றும் முன்முயற்சிகள். அத்துடன் பொதுமக்களின் தீவிரமான அக்கறை இவை யாவும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்,
ஆனால் உள்ளுர்நிர்வாகம் சாலை வசதி அமைப்பது, குடிநீர் தொட்டி கட்டுவதில் காட்டும் அக்கறையைப் பள்ளி சார்ந்து காட்டுவதில்லை, காரணம் அதில் ஊழலுக்கு அதிக இடமில்லை என்பதே.
ஆசிரியர்கள் முன்முயற்சி எடுத்தால் எந்தவொன்றையும் சாதிக்க முடியும் என்பதற்கு பிராங்களின் முன்னுதாரணமாக இருக்கிறார்,
இவரது சாதனையைப் பாராட்டி எந்த அங்கீகாரமும் இதுவரை அவருக்குக் கிடைக்கவில்லை,
வகுப்பறை குறித்த கனவு ஒன்றை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் பிராங்களின், ஆகவே இதை முன்னெடுத்துப் போவது நமது கையில் தானிருக்கிறது,
பிராங்களினுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டேன், விடைபெறும் போது மனதில் தோன்றியது, இது எங்கோ ஒரு கிராமத்தில் விதிவிலக்காக நடைபெற்ற ஒன்று என்பது மாறி தமிழகம் தழுவிய இயக்கமாக மாற வேண்டும், அப்போது தான் அடிப்படை கல்வியின் தரம் மேம்படும்.
சமகாலச் கல்விச் சூழலைப் பார்க்கையில் இந்த எண்ணம் வெறும்கனவைப்போலத்  தோன்றக்கூடும், ஆனால் இது போன்ற ஒரு கனவைத்தான் பிராங்களின் நனவாக்கியிருக்கிறார் என்பதால் எனக்கும் நிறைய நம்பிக்கை இருக்கவே செய்கிறது